Sunday, March 17, 2013

கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்!

கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்!

கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள் சொல்லாட்சி இடம்பெற்றிருப்பது வியப்பூட்டும் செய்தியல்லவா!
கொங்கு மண்டலப் பகுதியை, சேரநாட்டான் விக்கிரமசோழ தேவன் என்ற அரசன் ஆண்டான். அவனுடைய கல்வெட்டுகள், வலஞ்சுழிநாத சுவாமி கோயிலில் (திருவலஞ்சுழி) காணப்படுகின்றன. அவற்றின் ஒன்றில், ""ஆறில் ஒன்று கொண்டு அல்லவை கடிந்து, கோவீற்றிருந்து குடிபுறம் காத்து'' என்ற தொடர் உள்ளது. "குடிபுறம் காத்து' என்பது, ஒரு குறளில்(549) இடம்பெற்றிருக்கும் தொடர்.


""குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்''

மற்றொரு கல்வெட்டில், வள்ளுவரின் பெயரும் அவர் எழுதிய முப்பாலின் பெயரும், திருவள்ளுவர் சொன்ன முறைப்படியே ஆட்சி செய்யப்படுவதாகவும் குறிக்கப்பட்டுள்ளது.


""இன்சொல்லால் இனிதளித்து
வன்சொலால் மறம் கடிந்து
அழும் குழவிக்கு அன்புடைத்தாய் போல
அனைத் துயிர்க்கும் இனிதென
உலகத்துக்கு உணர நான்கும்
வள்ளுவர் உரைத்த முப்பால்
மொழியும் படியே அறம் அறிந்து
அல்லவை கடிந்து நல்லவை நாட்டி
ஆறில் ஒன்று கடமைகொண்டு
செங்கோல் நீதி வழுவாமல் நடந்து''

என்பது அக் கல்வெட்டுக் குறிப்பு. ""இன்சொல் இனிது ஈன்றல் காண்டான் (குறள்-99)

""அல்லவைதேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்'' (குறள்-96) என்னும் குறட்பாக்களில் வரும் சொல்லாட்சி, அக் கல்வெட்டில் படிந்திருக்கின்றன.

பல்லடம் செப்பேடு பின்வரும் முறையில், வள்ளுவத்தைப் போற்றுகிறது.

""ஓதி உணர்ந்து உலகம் முழுதாண்டு
நீதி சாகரம் நினைவுடன் கற்று
மும்மொழி விநோதன்;
முத்தமிழ் தெரிந்தோன்
வள்ளுவர் மரபு காத்து
முப்பால் மொழியின் படியே
அல்லவை கடிந்து நல்லவை நாட்டி''

என்று அச்செப்பேடு அறிவிக்கிறது.
""ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தான் அடங்காப்
பேதையின் பேதையார் இல்'' (குறள்-834)

என்ற குறளில் வரும் ""ஓதியுணர்ந்து'' என்ற தொடரும் குறள் 96-இல் வரும் அல்லவை, நல்லவை என்ற சொற்களும் இதில் அமைந்திருப்பதைக் காணலாம்.
பழநி வீரமுடியாளர் செப்பேடு ஒன்றும் வள்ளுவரைப் போற்றி உரைக்கிறது. திருக்குறளின் பெருமையைப் பறைசாற்றும் இந்தக் கல்வெட்டும் செப்பேடும் "வள்ளுவர் உரைத்த முப்பால்' என்றே கூறுகின்றன. திருவள்ளுவர் தன் நூலுக்கு "முப்பால்' என்றே பெயர் சூட்டியிருப்பார் என்று ஒரு கருத்து கூறப்படுகிறது. அக்கருத்துக்கு இவை சான்றாகத் திகழ்கின்றன.

No comments:

Post a Comment